Published : 20 Aug 2018 11:59 AM
Last Updated : 20 Aug 2018 11:59 AM

பெண் உயர் அதிகாரி பாலியல் புகார்: விசாரணை நடத்த காவல்துறையில் விசாகா கமிட்டி அமைப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடத்த காவல்துறையில் விசாகா கமிட்டி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் ஓய்வுபெற்றதை அடுத்து அந்தக் கமிட்டியில் யாரும் நியமிக்கப்படாமல் செயலற்று இருந்தது. காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கான புகார்கள் பல இருந்தும் கமிட்டி செயல்படாததால் புகார்கள் அவ்வப்போது எழுவதும் பின் காலப்போக்கில் மறைந்துபோவதுமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காவல்துறையிலேயே விசாகா கமிட்டி இல்லையா என தனது அதிர்ச்சியை பகிரங்கமாக எழுப்பியிருந்தார். இந்தச் செய்தி காவல்துறைக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவின்பேரில் காவல்துறையில் மீண்டும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக சீனியர் நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் தகவலாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவர் அது குறித்து மேலதிகாரிக்கு தகவல் அளித்தும் பலனில்லாததால், உள்துறை செயலர், டிஜிபி, முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் அலுவலகம் கேள்வி எழுப்பியதன் பேரில் தற்போது இந்த விவகாரத்தை விசாகா கமிட்டி முதல் வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் அந்த உயர் அதிகாரி அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பதால் போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி அதிர்ச்சி தெரிவித்த சில நாட்களிலேயே இதுபோன்ற புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x