Published : 29 Aug 2018 06:18 PM
Last Updated : 29 Aug 2018 06:18 PM

முகநூல் மூலம் இளம்பெண் நட்பு; சந்திக்க ஆசைப்பட்டு அடி வாங்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர்: நூதன முறையில் ரூ.83,000 வழிப்பறி

முகநூலில் இளம்பெண்ணிடம் நீண்ட நாட்கள் பழகிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அவரைச் சந்திக்க ஆசைப்பட்டு சென்று அடி வாங்கி செல்போன், ரூ. 83 ஆயிரம் பணத்தையும் பறிகொடுத்தார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். முகநூல் மூலம் நூதன வழிப்பறியில் ஈடுபட்டது ஆணா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (45). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் தனசேகரன் முகநூலில் சாட் செய்வது வழக்கம். இதில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஆண், பெண் நண்பர்கள் உண்டு. இவரது நட்பு வட்டாரத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம்பெண்ணும் ஒருவர்.

முகநூலில் பெண்கள் நட்பு என்றால் ஆண்கள் பெரும்பாலும் விரும்பிப் பழகுவார்கள். சாட்டிங் செய்ய ஆசைப்படுவார்கள். இதே போன்று தனசேகரனுடன் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம்பெண் அடிக்கடி சாட்டிங் செய்து வந்தார். ஆரம்பத்தில் சேமநலம் விசாரித்த நட்பு பின்னர் சற்று முன்னேறி இரண்டு பக்கமும் குடும்பம், வியாபாரம், வருமானம் அனைத்தும் குறித்து சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

தனசேகரனிடம் நன்றாகப் பழகிய அப்பெண் தான் நாகர்கோவிலில் வசிப்பதாகவும், தனது கணவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் கூறியுள்ளார். நன்றாக நெருங்கிப் பழகிய நிலையில் தனது பிரச்சினைகள் சிலவற்றைக் கூறி தனசேகரனுக்கு அந்தப் பெண் வலை விரித்துள்ளார்.

தான் மிகவும் தனிமையை உணர்வதாகவும் தனக்கென்று யாரும் இல்லை என்றும் அந்தப் பெண் பேசியுள்ளார்.

இந்நிலையில் தனசேகரன், வெறும் சாட்டிங்கில், செல்போன் பேச்சில் மட்டும் நமது நட்பு தொடர்ந்தால் எப்படி நேரில் வந்தால் நான் பேசி ஆறுதலாக இருப்பேன் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நானென்ன வேண்டாம் என்றா சொன்னேன் வாருங்கள் சந்திப்போம் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.

விலாசம் போன் நம்பரை எல்லாம் வாங்கிக்கொண்டு ஆசை ஆசையாக இனிப்பு காரம் எல்லாம் வாங்கிக்கொண்டு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார் தனசேகரன். இறங்கியவுடன் அந்தப் பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.

பேருந்து நிலையத்துக்கு அந்நிய ஆணான உங்களை நான் வந்து அழைத்துச் சென்றால் நன்றாக இருக்காது. என் தம்பியை அனுப்புகிறேன் அவன் வந்து உங்களை வீட்டுக்கு அழைத்து வருவான் தயக்கம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவரை ஒரு இளைஞர் செல்போனில் அழைத்து அடையாளங்களைக் கேட்டு அருகில் வந்துள்ளார். பின்னர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர் அக்கா அழைத்து வரச்சொன்னாங்க வாங்க போகலாம் என தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளார். முகநூல் தோழியை சந்திக்கவேண்டும் என்ற ஆசையில் எதையும் விசாரிக்காமல் இளைஞருடன் பயணித்துள்ளார் தனசேகரன்.

இருசக்கர வாகனம் நாகர்கோவிலின் ஆளரவமற்ற பகுதியில் சென்றது. ஒரு இடத்தில் வாகனத்தை இளைஞர் நிறுத்தியுள்ளார். தனசேகரனைக் கீழே இறங்கச்சொன்ன அந்த இளைஞர் அவரைத் தாக்கியுள்ளார்.

ஏய் என்னப்பா அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார் தனசேகரன். அவரை தரக்குறைவாக திட்டி உனக்கு முகநூல் பெண்கள் உறவு கேட்கிறதா? கூப்பிட்டால் வந்துவிடுவாயா என தாக்கி அவரை மிரட்டி செல்போனைப் பறித்துள்ளார் அந்த இளைஞர்.

நீ அந்தப்பெண்ணின் தம்பிதானே என்னை ஏன் தாக்குகிறாய் என்று தனசேகரன் கேட்க தம்பியாவது, கம்பியாவது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுடா என அந்த இளைஞர் மிரட்ட, தான் முகநூல் நட்பு மூலம் ஏமாற்றப்பட்டு வசமாக சிக்கியது தெரிந்து என்னிடம் பணம் இல்லை என தனசேகரன் கூற பர்ஸைக் கொடு எனப் பிடுங்கிய அந்த இளைஞர் அதில் இருந்த சில ஆயிரம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு, வங்கி ஏடிஎம் கார்டையும் பிடுங்கியுள்ளார்.

பின்னர் தனசேகரனை மிரட்டி ஏடிஎம் கார்டு பின் நம்பரை கேட்டு வாங்கி அவரை அழைத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ரூ.83 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு இதுபற்றி புகார் அளித்தால் உனக்குத்தான் அசிங்கம் ஒழுங்காய் ஊர்ப்போய்ச் சேருகிற வழியைப்பார் என்று கூறி தனசேகரன் வாங்கி வந்த இனிப்பு காரத்துடன், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

பணம் போன விரக்தியில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காவல்துறையில் தனசேகரன் புகார் அளித்துள்ளார். போலீஸார் அந்தப் பெண்ணின் முகநூல் கணக்கு, அவர் தனசேகரனிடம் பேசிய போன் நம்பர்கள், கடைசியாக பேசிய போன் நெம்பர் உள்ளிட்டவற்றை சேகரித்து சைபர் செல் மூலம் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். முகநூலில் பெண்ணாகப் பழகியவர் உண்மையிலேயே பெண்ணா? அல்லது இதுபோன்ற நபர்களை வளைத்துப்போட போலி முகநூல் கணக்கா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூல் மூலம் சபல புத்தியுள்ளவர்களை வளைத்து அவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க போலி முகநூலை பெண்கள் பெயரில் உருவாக்கி வழிப்பறி செய்யும் கும்பலின் கைவரிசையா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x