குழந்தையின் உயிரைப் பறித்த தந்தையின் செல்ஃபி மோகம்: காவிரி பாலத்தில் புகைப்படம் எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

குழந்தையின் உயிரைப் பறித்த தந்தையின் செல்ஃபி மோகம்: காவிரி பாலத்தில் புகைப்படம் எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
Updated on
1 min read

காவிரி ஆற்று  பாலத்தின் கைப்பிடி சுவர் மீது அமர வைத்து புகைப்படம் எடுத்தபோது, தவறி விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் அருகே எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தன்வந்த் (5). இன்று (செவ்வாய்க்கிழமை) சிறுவன் தன்வந்துக்கு பிறந்தநாள் என தெரிகிறது. தன்வந்த் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். இந்நிலையில், பாபு தன் மகன் அஸ்வந்தை வாங்கல் காவிரியாற்று பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  காவிரி ஆற்று பாலத்தில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளார். அத்துடன் காவிரி ஆற்றின் பின்னணியில் குழந்தையை அமர வைத்து புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, காவிரி ஆற்றுப்பாலம் கைப்பிடி சுவர் மீது குழந்தை தன்வந்தை அமர வைத்து புகைப்படம் எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தவறுதலாக தன்வந்த் காவிரியாற்றில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார். காவிரி ஆற்றுப் பாலம் 56 தூண்களை கொண்டது. இதில் மோகனூர் பகுதியில் இருந்து இருபத்தி நான்காவது பாலக்கட்டை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியாற்றில் நின்று செல்ஃபி எடுப்பதோ, புகைப்படம் எடுப்பதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், காவிரியாற்றுப் பாலத்தின் கைப்பிடி சுவர் மீது அமர வைத்து புகைப்படம் எடுத்ததால், 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in