Published : 01 Aug 2018 03:21 PM
Last Updated : 01 Aug 2018 03:21 PM

சிபிஐயிடம் சிலைக்கடத்தல் வழக்குகளை ஒப்படைக்க தமிழக அரசு முடிவு; மூத்த அமைச்சர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரியை பலி கொடுப்பதா? - அன்புமணி கண்டனம்

சிபிஐயிடம் சிலைக்கடத்தல் வழக்குகளை ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களைக் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோயில் சிலைகள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் குழு நடத்தி வரும் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்றும், இவ்வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு சிலைக்கடத்தல் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதியாகும்.

காவல்துறை தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறுவது ஒருபுறம் கண்டிக்கத்தக்கதாகவும், இன்னொருபுறம் வியப்பளிப்பதாகவும் உள்ளது. எந்த ஒரு அரசும் அதன் மூத்த காவல் அதிகாரி மீது நம்பிக்கையில்லை என்று கூறாது. அதுமட்டுமின்றி, பொன்.மாணிக்கவேல் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட அதிகாரி.

கடந்த காலங்களில் அவர் பணியாற்றிய அனைத்து பிரிவுகளிலும் அவரது திறமை மீதோ, நேர்மை மீதோ எவரும் எந்த ஐயமும் எழுப்பியதில்லை. அப்படிப்பட்ட அதிகாரி மீது நம்பிக்கையில்லை என்று அரசு கூறுவதைப் பார்த்தால், தான் திருடி, பிறரை நம்பாள் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

இதற்கெல்லாம் மேலாக, இந்த வழக்கை தாம் விசாரிக்க வேண்டும் என்று மாணிக்கவேல் கேட்டு வாங்கவில்லை. மாறாக, சென்னை உயர் நீதிமன்றம் தான் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்தது. அப்படிப்பட்டவரின் நேர்மையை சந்தேகிப்பது உயர் நீதிமன்றத்தை சந்தேகிப்பதற்கு சமமானதாகும்.

தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. உதாரணமாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து விசாரித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

 இதுதொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி உயர் நீதிமன்றம் வினா எழுப்பி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தாது மணல் கொள்ளை வழக்கு என ஏராளமான வழக்குகளில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக எதிர்த்து வரும் தமிழக அரசு, இவ்வழக்கில் யாரும் கேட்காமலேயே சிபிஐ விசாரணைக்கு முன்வந்திருப்பதை எட்டாவது அதிசயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதிலும் சில அரசியல் கணக்குகள் உள்ளன என்பதே உண்மை.

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல்கள், தங்கச் சிலைகளை செய்வதில் நடந்த மோசடிகள் ஆகியவை தொடர்பான வழக்குகளில் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகனும், இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையருமான ராஜா உள்ளிட்ட பல அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். முன்னாள் ஆணையர் தனபால் முன்பிணை பெற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா செவ்வாய்கிழமை கைது கைது செய்யப்பட்டார். அடுத்தக்கட்டமாக இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர்கள் சிலர் மீதும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாணிக்கவேல் குழு ஆயத்தமாகி வந்ததாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இவ்விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என பொன்.மாணிக்கவேலுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு மாணிக்கவேல் ஒப்புக்கொள்ளாததால் தான் அவரது தலைமையிலான விசாரணைக் குழு கலைக்கப்படுவதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால், அவர்கள் இதுவரை நடந்த விசாரணை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அமைச்சர்களை நெருங்க மேலும் பல மாதங்கள் ஆகும். அதற்குள்ளாக அமைச்சர்களைக் காப்பாற்ற வேறு வழிகளை கண்டுபிடித்து விடலாம்; ஆனால், பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு நீடித்தால், சட்டப்பூர்வ அனுமதிப் பெற்று எந்த நேரமும் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் தான் விசாரணைக்குழுவை கலைக்க தமிழக அரசு துடிக்கிறது.

உண்மையில் சிலைக் கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையை பொன்.மாணிக்கவேல் குழு ஏற்ற பிறகு தான் பல வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் ராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அண்மையில் மீட்டு வந்து தஞ்சை பெரியகோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

இத்தகைய சூழலில் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டால் அடுத்த சில மாதங்களுக்கு முடங்கிவிடும். இதைப்பயன்படுத்தி இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். உயர் நீதிமன்றமும் இதை அனுமதிக்கக்கூடாது. மாறாக பொன்.மாணிக்கவேல் குழு விசாரணை தொடருவதை அரசும், நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x