Published : 12 Aug 2018 11:13 AM
Last Updated : 12 Aug 2018 11:13 AM

63% இடங்கள் காலி: பொறியியல் படிப்பை பயனுள்ளதாக்க அரசின் திட்டம் என்ன?- ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் மொத்தம் 1.76 லட்சம் இடங்கள் நடப்பாண்டில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆனால், 36.90% இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. 63% இடங்கள் காலியாக உள்ள நிலையில் பொறியியல் படிப்பை பயனுள்ளதாக மாற்ற தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத வகையில் சரியும் என்று தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பு வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லாமல் ஏட்டுச் சுரைக்காயாக மாறியிருப்பதே இந்த அவலநிலைக்கு காரணமாகும். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும் இக்கலந்தாய்வில் இதுவரை மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் 36,126 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 125 முதல் 149 வரை தகுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான ஒதுக்கீடு நாளை மாலை அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 18,000 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் முதல் 17-ம் தேதி மாலை வரை நடைபெறவிருக்கிறது.

முதல் மூன்று கட்ட கலந்தாய்வில் 36,126 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்லூரியிலும் அனைத்து இடங்களும் நிரம்பவில்லை. மொத்தம் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வில் 71 கல்லூரிகளில் இதுவரை ஒரே ஒரு மாணவர் கூட கலந்தாய்வு மூலம் சேரவில்லை. அதுமட்டுமின்றி, 214 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த காலங்களில் இல்லாத மிக மோசமான நிலைமை ஆகும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் கூட பெரிய அதிசயங்கள் எதுவும் நடந்துவிடும் என்று தோன்றவில்லை. ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு 60,000 முதல் 65,000 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படக்கூடும். இதிலும் எவ்வளவு பேர் சேருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களே தெரிவித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 1.76 லட்சம் இடங்கள் நடப்பாண்டில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். இந்த இடங்களுக்காக மொத்தம் 1,59,632 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1,04,000 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்களிலும் அதிகபட்சமாக 65,000 மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. அதாவது மொத்தமுள்ள இடங்களில் 36.90% இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் பலருக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவும் நிலையில், பொறியியல் படிப்புக்கு உள்ள இடங்களில் மூன்றில் இரு பங்கு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கக்கூடும் என்றால் பொறியியல் படிப்பு எந்த அளவுக்கு மதிப்பிழந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் லட்சியப் படிப்பாக திகழ்ந்த பொறியியல், இப்போது வேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பு சீரழிந்ததற்கு காரணம் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படாததுதான். கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை வேண்டுமானால் பல பத்தாண்டுகளாக மாற்றியமைக்காமல் இருக்கலாம். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நிமிடத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக பொறியியலைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே யூகித்து, அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்போது தான் பொறியியல் படிப்புக்கு மரியாதை கிடைக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக்கான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணைவேந்தர்களையே நியமிக்காத அரசு தான் தமிழகத்தில் உள்ளது. துணைவேந்தரையே நியமிக்காத அரசு, பாடத்திட்டத்தை சிறப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி) மற்றும் சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மிகவும் தரமற்றதாக உள்ளது. இந்த நிலையை மாற்றி பொறியியல் படிப்பை போட்டி நிறைந்ததாக மாற்றுவதற்காக அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; அத்துடன் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு பருவத்திற்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் ஐ.ஐ.டிக்கு இணையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தையும், ஐ.ஐ.எஸ்சிக்கு இணையான அறிவியல் கல்வி நிறுவனத்தையும் உலகின் தரமான பேராசிரியர்களைக் கொண்டு தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவற்றின் வழிகாட்டுதலில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளை நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x