பேச்சுத்திறமையினால் மொரார்ஜி, சி.சுப்பிரமணியம், இந்திரா காந்தியை மடக்கிய கருணாநிதி

பேச்சுத்திறமையினால் மொரார்ஜி, சி.சுப்பிரமணியம், இந்திரா காந்தியை மடக்கிய கருணாநிதி
Updated on
2 min read

கருணாநிதியின் பேச்சில் எப்போதும் ஒரு நையாண்டி, மெல்லிய ஒரு நகைச்சுவை உணர்வு, செம்மொழிச் சிலேடை, எதிராளியின் வார்த்தையைப் பயன்படுத்தி அவருக்கு எதிராகவே சூசகமாகத் திருப்பி விடுவது போன்ற தன்மைகள் பலராலும் ரசிக்கப்படும் ஒன்றாகும்.

இந்த சிலேடை, நையாண்டி ஆகியவற்றில் அவருக்கு தமிழ், ஆங்கிலம் வேறுபாடு கிடையாது, இரு மொழிகளிலுமே அவரது பேச்சு நடை இத்தகைய கூறுகளைக் கொண்டதாகும்.

1969-ம் ஆண்டு மார்ச் மாதம், அண்ணாதுரை மறைந்து கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று ஒருமாதகாலமிருக்கும். அப்போது மத்தியில் துணை முதல்வராக இருந்தார் மொரார்ஜி தேசாய், நிதித்துறையும் இவர் கையில்தான் இருந்தது. அப்போது வறட்சி நிவாரணமாக ரூ.5 கோடி நிதி கேட்டார் கருணாநிதி. அதற்கு மொரார்ஜி தேசாய், “என் தோட்டத்தில் பணம் காய்ச்சி மரங்கள் இல்லை” என்றார். இதைக்கேட்டு எந்த விதத்திலும் அசராத கருணாநிதி உடனேயே நகைச்சுவை உணர்வுடன், “பணங்காய்ச்சி மரங்களே இல்லாத போது அவை உங்கள் தோட்டத்தில் மட்டும் எப்படி இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.

அதே போல் 1971 பொதுத்தேர்தல் சமயத்தில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுகளின் போது இந்திரா காங்கிரஸுக்கு கருணாநிதி 15 சட்டப்பேரவை தொகுதிகளை வழங்கினார். இது மூத்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியத்தின் கோபத்தைக் கிளற, அவர், “எங்கள் சுயமரியாதைக்கு விடப்படும் சவால்” என்றார். உடனே கருணாநிதி, “எங்கள் திமுக-வே சுயமரியாதை இயக்கம்தான்” என்று பதிலளித்தார்.

இன்னொரு சம்பவத்தில் எமர்ஜென்சி காலக்கட்டத்திலிருந்து 4 ஆண்டுகள் இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்து வந்த கருணாநிதி செப்டம்பர் 1979-ல் இந்திரா காந்தி இல்லத்துக்குச் சென்று கருணாநிதி 1980 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசச் சென்றார்.

இந்திரா காந்தி அப்போது கருணாநிதியிடம் “நாம் புதிய அத்தியாயத்தை திறக்கிறோம்” என்று கூறினார், உடனேயே கருணாநிதி, “இல்லை, இல்லை..நாம் பழைய அத்தியாயத்தைத்தான் தொடர்கிறோம்” என்று 1971 கூட்டணியை நினைவுபடுத்திக் கூறி இந்திரா காந்தியை நெகிழவைத்தார்.

இதே போல் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் சிறை சென்ற திமுகவினரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.200 அனுப்பி வந்தார் கலைஞர். அப்போது திமுகவின் அனல்பொறி பேச்சாளர் வெற்றிகொண்டான் கருணாநிதியிடம் தன் மனைவிக்கு ரூ.100தான் வந்துள்ளது என்று புகார் தெரிவித்தார். ஆனால் கருணாநிதி இன்னொரு 100 ரூபாய் வெற்றி கொண்டானின் 2வது மனைவிக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2003-ல் இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக மீண்டும் நினைத்துப் பார்த்துக் கூறிய கருணாநிதி “நான் ஏன் அப்படிச் செய்தேன் என்றால் எனக்கும் 2 மனைவிகள்” என்றார்.

சில வேளைகளில் செய்தியாளர்களின் குடைச்சலான கேள்விகளையும் கூட அசாதாரண நகைச்சுவையுடன் எதிர்கொள்வதுண்டு. ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ‘ராமதாஸ் (பாமக நிறுவனர்) கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாரே’ என்று கேட்ட போது அதே பெயரில் உள்ள பத்திரிகையாளரைக் காட்டி ’இந்த ராமதாஸா?, அப்படியா?’ என்று கேட்டதும் உண்டு. 1998-ம் ஆண்டில் பாஜக-அஇதிமுக கூட்டணி காலக்கட்டத்தில் முரசொலி மாறன் எந்த கட்சியின் மீதும் அரசியல் தீண்டாமை கிடையாது என்று கூறி சர்ச்சையானது. இது குறித்து கருணாநிதியிடம் அப்போது கேட்ட போது “தீண்டுவதற்கும் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது” என்றார். அடுத்த ஆண்டே பாஜக தலைமை தேஜகூ-வில் திமுக கூட்டணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in