Published : 22 Aug 2018 09:08 AM
Last Updated : 22 Aug 2018 09:08 AM

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு காத்திருக்கும் சவால்: வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்துமா திமுக?

திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே அதிமுக, அமமுக கட்சியினர் தேர்தல் வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டனர். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவுக்கு இந்த முறை மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது.

கவுரவப் பிரச்சினை

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வசமும், திருவாரூர் திமுக வசமும் இருந்தது. திரு வாரூர் கருணாநிதி வென்ற தொகுதி என்பதால், அங்கு மீண்டும் வெல்வதை தனது கவுரவப் பிரச்சினையாக திமுக தலைமை கருதுகிறது. ஆனால், திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், ‘‘திருவாரூர் தனக்கும் சொந்த தொகுதிதான். கருணாநிதி நின்றபோது திமுக வெற்றி பெற்றிருக்கலாம். இனி அது நடக்காது’’ என்று சவால் விட்டு பேசினார்.

அடுத்து திருப்பரங்குன்றத் துக்கு தினகரனை அழைத்து வந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுக்கூட்டம் நடத்தியது.

அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என உறுதியாகத் தெரிவித்தனர்.

தற்போதும் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தனித்தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அதனால், இந்த தொகுதி வேட்பாளர் தேர்விலேயே அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏற்படக் கூடாது என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வாக்குகள் சிதறும்

இதற்கு முன் இங்கு இடைத்தேர்தலை சந்தித்தபோது அதிமுக பிளவுபடாமல் இருந்தது.

ஆனால், தற்போது அதிமுகவுக்கு போட்டியாக அமமுகவும் களம் இறங்கி உள்ளதால் வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து இருமுறை அதிமுக வெற்றி பெற்றும் இந்த தொகுதி மக்களுக்கு பெரிதாக எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அதனால், திமுகவில் வேட்பாளர் தேர்வை பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு கள் அமையும். அதிமுகவை பொறுத்தவரை திருவாரூரிலும் திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆர்.கே.நகர் போல் தோல்வி அடைந்தால், அடுத்து நடக்கும் மக்களவைத் தேர்தலை சந்திப்பதில் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அதிமுக தலைமை கருதுகிறது.

அதிமுகவில் போட்டியிட ஆர்வம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலில் போட்டியிட்டால் தமிழகம் முழுவதும் பிரபலமாகலாம், கட்சிக்குள்ளும் பெரிய அறிமுகம் கிடைக்கும் என்பதால் அதிமுகவில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

திமுகவிலோ அதற்கு நேர் மாறாக போட்டியிட்டால் மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டும், அதில் வெற்றி பெற்றாலும்கூட மீதமுள்ள 2 ஆண்டுகள் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால் பலர் போட்டியிட தயங்குவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் சூழ்நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x