Published : 27 Aug 2018 03:43 PM
Last Updated : 27 Aug 2018 03:43 PM

சென்னை டிபி சத்திரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்: போலீஸுக்கு தகவல் சொல்லி தப்பி ஓட்டம்

டிபி சத்திரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியைக் கொன்றுவிட்டு போலீஸுக்கும் தகவல் சொல்லிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம், நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன் (30). மாநகராட்சி ஒப்பந்த ஊழியராகப் பணியில் உள்ளார். இவரது மனைவி அம்மு (26). இருவருக்கும் திருமணமாகி 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.

சீனிவாசன் தனது பெற்றோர் வீட்டுக்கு அருகில் தனியாக மனைவி, மகனுடன் வசிக்கிறார். அம்மு- சீனிவாசன் திருமண வாழ்க்கை சமீபகாலமாக சந்தோஷமாக இல்லை. மனைவி மீது அதிகம் சந்தேகப்படும் சீனிவாசன் ஒரு கட்டத்தில் அது தீவிரமாக மனநோய் போல் மாறியுள்ளது. அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக அதிக அளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவியிடம் நள்ளிரவு வரை தகராறு நீடிக்குமாம். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மனைவியைத் தாக்கி அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

மனைவி ரத்த வெள்ளத்துடன் கீழே சாய்ந்து உயிரிழந்தவுடன் அவரை இழுத்து ஓரமாகப் போட்டுவிட்டு கத்தியை கழுவி, உடைகளை மாற்றிக்கொண்ட சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

நள்ளிரவில் கதவைத் தட்டி பேரனை தூக்கிக்கொண்டு மகன் நிற்பதைப்பார்த்து குழப்பமடைந்த தந்தை பாலகொண்டையா அம்மா நாகரத்தினத்திடம் மகனை ஒப்படைத்து, 'மனைவியுடன் சண்டை. அவளைக் கொன்றுவிட்டேன்' என்று கூறி தப்பித்துச் சென்றுள்ளார்.

பிறகு, அவசர போலீஸ் உதவி எண்ணை அழைத் சீனிவாசன்,  தனது வீட்டின் முகவரியைக் கூறி அங்கு கணவன் மனைவி இரவு முழுவதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரவு முழுவதும் சத்தமாகவும் தொல்லையாகவும்  இருக்கிறது என்று பக்கத்து வீட்டுக்காரர் போல் புகார் கூறி போனை அணைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உடனடியாக புகாரைப் பெற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு சீனிவாசனின் பெற்றோர் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீஸாரிடம் நடந்ததைக் கூறி தனது மகன் தப்பிச் சென்றதையும் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீஸார் சீனிவாசன் வீட்டுக்குள் சென்று அவரது மனைவி அம்முவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய சீனிவாசனை போலீஸார் தேடி வருகின்றனர். சந்தேகம் என்னும் தவறான புத்தியால் 8 வயது மகன் இருக்கிறான் என்பதையும் மறந்து மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற சீனிவாசனால் குடும்பமே தற்போது சிதைந்து போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x