வேலூர், நாகை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகங்கள்: முதல்வர் அறிவிப்பு

வேலூர், நாகை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகங்கள்: முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வேலூர், நாகை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விதி 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில்: "வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தில், 18 நீதிமன்றங்கள் போதிய இடவசதி இன்றி இயங்கி வருவதைக் கருத்தில் கொண்டும், நீதிபதி மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்காணும் நீதிமன்றங்கள் போதுமான இடவசதியுடன் சிறப்பாக செயல்பட கட்டடம் ஒன்றும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் 20 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

இதே போன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 8 நீதிமன்றங்கள் பழமை வாய்ந்த கட்டடத்திலும், பழுதடைந்த கட்டடத்திலும் செயல்படுவதால், அந்தக் கட்டடங்கள் நீதித் துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, மகளிர் நீதிமன்றம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் தற்போதுள்ள நீதிமன்ற வளாகத்திலேயே 19 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

இதன் மூலம், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வருகை புரியும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி கிடைக்க வழிவகை ஏற்படும்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in