

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 9 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மூச்சுக்குழாய் மாற்றுவதற்காகக் கடந்த மாதம் 18-ம்தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்குச் சென்றார். அதன்பின் கடந்த 28-ம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தக் குறைபாட்டால், காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தநிலையில் வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயல்பாட்டுக் குறைவு காரணமாக இன்று மாலை 6.10 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து இதுவரை வெளியிட்ட அறிக்கைகள் விவரம் வருமாறு:
ஜூலை 18-ம் தேதி
கடந்த மாதம் 18-ம் தேதி கருணாநிதியின் மூச்சுக்குழாய் (டிரக்கோஸ்டமி) மாற்றுவதற்காகக் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மூச்சுக்குழாய் அகற்றப்பட்டபின் அன்று மாலையே வீடு திரும்பினார்.
ஜூலை 26-ம் தேதி
26-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரகத் தொற்று காரணமாகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நிலையைச் சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என அறிவிக்கப்பட்டது.
ஜூலை 28-ம் தேதி
ஜூலை 28-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாதல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காவேரி மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரின் ரத்த ஓட்டம் சீரடைந்தது. இருப்பினும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார் என்று காவேரி மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 29-ம் தேதி
கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது, அதன்பின் காவேரி மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் அவரின் உடல் நிலை இயல்பு நிலைக்கு வந்தது. இருந்தபோதிலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஜூலை 31-ம் தேதி
கடந்த 28-ம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலையில் 29-ம் தேதி திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் இயல்பு நிலைக்கு வந்துள்ளார். இருந்தாலும், கருணாநிதியின் வயது மூப்பு, கல்லீரல் செயல்பாடு குறைவு காரணமாக அவரின் உடல்நிலைக்குத் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 6-ம் தேதி
வயது மூப்பு காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் உள்ளுறுப்புகளைத் தொடர்ந்து செயல்படுத்த வைப்பது சவாலாக இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணிநேரம் சென்றபின்புதான் உறுதியாகக் கூற முடியும் எனக் காவேரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 7-ம் தேதி (மாலை 4.30 மணி)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த சில மணிநேரங்களாகத் தொடர்ந்து மிகவும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. மிக அதிகபட்சமாக உயர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரின் உடலுறுப்புகளை செயல்பட வைப்பதில் பெரும் சவால் நிலவுகிறது எனக் காவேரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 7-ம் தேதி (மாலை 6.45)
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிரமாகச் சிகிச்சை அளித்தபோதிலும், அவரின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்துவிட்டது. நாட்டின் மிக உயர்ந்த தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்துவாடும் குடும்ப உறுப்பினர்களுடனும், உலக அளவிலான தமிழ்ச்சமூகத்துடனும் எங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது