Published : 03 Aug 2014 12:00 AM
Last Updated : 03 Aug 2014 12:00 AM

தமிழக சிறைகளில் 2 ஆண்டுகளில் 131 பேர் மரணம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கேசவன் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை 1095 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்படும் கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ ஏற்பாடுகள் இல்லாததாலேயே ஏராளமான கைதிகள் உயிரிழக்க நேரிடுவதாக கேசவன் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் உள்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2012-ம் ஆண்டில் 62 பேரும், 2013-ம் ஆண்டில் 69 பேரும் தமிழக சிறைகளில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ச்சி மற்றும் நோய் பாதிப்பு காரணமாகவே இத்தகைய மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், சிறை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு எதுவும் இல்லை என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

இந்த விவகாரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பான அறிக்கையை அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடமிருந்து 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் பெற்றிட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x