

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதுமேற்கு, வடமேற்கில் தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் நேற்று பரவலாக மழைபெய்தது. சென்னையைப் பொருத்தவரை, பல இடங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல் விட்டுவிட்டு மிதமானமழை பெய்தது.
மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், அடையாறு, சாந்தோம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், சூளைமேடு உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலையில் மேகமூட்டமாக இருந்தது. சில இடங்களில் சில மணி நேரம் லேசான வெயில் அடித்தது. இதன்பிறகு, மேகக்கூட்டங்கள் திரண்டு, குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையில், நேற்று பிற்பகலுக்குப் பிறகு, சென்னையில் பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, தி.நகர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உட்பட பல இடங்களில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகளுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் நேற்று மாலை வீடு திரும்ப சிரமப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் நேற்று மாலை நிலவரப்படி 2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.