

சென்னை: முருகப்பா குழும முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
இதுகுறித்து முருகப்பா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவான் பகதூர் முருகப்பா செட்டியார் நிறுவிய முருகப்பா குழுமம் 125 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. முருகப்பா குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவருக்கு மனைவி லலிதா மற்றும் மகன்கள் அருண் வெள்ளையன், நாராயணன் வெள்ளையன் உள்ளனர்.
முருகப்பா குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களை விரிவுபடுத்தியதிலும், அவற்றின் செயல்பாட்டை வலுவானதாக்கியதிலும் வெள்ளையனின் பங்கு மிக முக்கியமானது.
கோரமண்டல் இன்டர்நேஷனல், ஈஐடி பாரி, கனோரியா கெமிக்கல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், எக்ஸிம் பேங்க், ஐஓபி உள்ளிட்ட பல குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் வெள்ளையன் திறம்பட பணியாற்றியவர்.