

சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று (நவ.18) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அதேநேரம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடி வருகிறது.
இந்நிலையில், கடந்த அக். 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்.16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், நவ.18-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்றும முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த அக்.16-ம் தேதி அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னையில் எழிலகக் கட்டிட வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்வதாக ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ நடத்தும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆதரவு அளிக்கும் என்று அதன் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் தெரிவித்தார்.
தலைமைச் செயலர் எச்சரிக்கை இதற்கிடையே, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அனைத்து துறைகளின் செயலர்களுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 18-ம் தேதி (செவ்வாய்) நடைபெறம் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறிப்பிட்ட சில அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது.
அரசு அலுவலகங்களின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிமுறையை மீறும் செயல் ஆகும். எனவே, நவ.18-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கப்படாது.
நவ.18 அன்று எந்த அரசு ஊழியருக்கும் மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு எதுவும் வழங்கப்படக்கூடாது. அனைத்து துறைகளின் செயலர்களும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள் ஊழியர் வருகைப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதன் நகலை மனிதவள மேலாண்மைத்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். அதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகைப்பதிவு விவரத்தை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வாயிலாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் நகலை மனித வள மேலாண்மைத்துறைக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.