‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை

‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை
Updated on
1 min read

மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது.

அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு.

சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை.

தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.

தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in