சென்னை மின்சார ரயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் இருக்கைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

சென்னை மின்சார ரயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் இருக்கைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி உட்பட பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பெண்களின் இருக்கைகளை ஆண்களும், முதல் வகுப்பு டிக்கெட் எடுக்காதவர்களும் ஆக்கிரமித்து வருவதால், பெண் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, திருநின்றவூர் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் கூறியதாவது: மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்கென தனி பகுதி உள்ளது.

காலை, மாலை, நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்கள் பகுதிகளில் உள்ள இருக்கைகளை ஆண்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். குறிப்பாக இந்த இருக்கைகளை ஆண் பயணிகள், இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.

இதனால், பெண் பயணிகள் கூட்ட நெரிசலில் நின்றபடி பயணிக்கும் அவலநிலை உள்ளது. இது குறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஓரிரு நாட்கள் மட்டும் டிக்கெட் பரிசோதகர்கள் கண்துடைப்பாக ஆய்வுசெய்து சென்று விடுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். முதல்வகுப்பு பெட்டிகளில் பெண்கள் பகுதிகளில் ஆண்கள் பயணிக்கக் கூடாது. முதல்வகுப்பு பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்தவர்கள், வியாபாரிகள் பயணிப்பதை தடுக்க வேண்டும். முதல்வகுப்பு பெட்டிகளில் அதற்குரிய டிக்கெட் எடுத்தவர்கள் தான் பயணிக்கிறார்கள் என்பதை பரிசோதனை மூலமாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in