‘ஜனநாயக அமைப்புகள் மீது பழி சுமத்தியவர்களுக்கு பாடம்’ - பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து இபிஎஸ் கருத்து
சென்னை: ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். மேலும், ஜனநாயக அமைப்புகளை தளர்த்தும் முயற்சிகளை பிஹார் மக்கள் உறுதியாக நிராகரித்துள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் நிதிஷ்குமாருக்கு என் வாழ்த்துகள். இந்த வெற்றி பிஹாரின் முன்னேற்றத்தை மேலும் வேகப்படுத்தும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
