

சென்னை: ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து சென்னை ரயில்வே கோட்டம் ‘க்யூஆர் கோடு’ வாயிலாக புகார் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே உணவகங்கள் குறித்த கருத்துகள், ஆலோசனைகள், புகார்களை பயணிகள் பதிவு செய்யலாம். உணவகங்களில் அதிக கட்டணம், சேவைக் குறைபாடு, உணவின் தரம், அளவு, உணவு, தண்ணீர் கிடைக்காதது, சுகாதார நிலை உள்ளிட்ட விவரங்களை இதில் பதிவிடலாம்.
ரயில் நிலைய உணவகங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை பயணிகள் தங்களது செல்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், உணவகத்தின் இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அதை உறுதிசெய்த பிறகு, ‘ரயில் மதத்’ செயலிக்குள் செல்போன் எண்ணைப் பதிவிட்டு, ஓடிபி வந்ததும் புகார்களை பதிவிட வேண்டும். அதன்பிறகு, குறிப்பு எண்ணுடன் புகாருக்கான ஒப்புகைச்சீட்டு, ரயில் செயலியில் அனுப்பி வைக்கப்படும். புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.