

ராமேசுவரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தேசிய மாணவர் படையின் (என்சிசி) காரைக்குடி அணி சார்பில் நேற்று நடைபெற்றது. நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தேசிய மாணவர் படையின் காரைக்குடி அணி சார்பில் நடைபெற்றது. என்சிசி திருச்சி குழு தளபதி கர்னல் வை.விஜய்குமார் தலைமை வகித்தார்.
ராமேசுவரம் அரசு உயர்நிலைப் பள்ளி, மரைக்காயர்பட்டினம் கேந்திரிய வித்யாலயா, அமிர்தா வித்யாலயம், காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி, மதுரை லேடி டோக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
மேலும், கடற்படை, கடலோரக் காவல்படை, தமிழக காவல் துறையினர் ஆகியோர் விழாவில் அணி வகுத்தனர். விழாவின் நிறைவாக அனைவரும் சேர்ந்து வந்தே மாதரம் பாடலைபாடினர். இந்த நிகழ்ச்சியை, ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி என்சிசி அலுவலர் பழனிசாமி ஒருங்கிணைத்தார்.