

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்லியில் கார் குண்டுவெடிப்பு என்பது பாஜக ஆட்சியில் 11 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு வெளியே நடைபெற்ற முதல் சம்பவம். நாட்டு நலனில் எள் முனை அளவுக்கு கூட அக்கறையற்ற திமுக, விசிக போன்ற கட்சிகள் வாக்கு நலனுக்காக தவறான கருத்தை விதைக்கின்றனர். 15 கிலோ வெடிப்பொருள் வெடித்ததற்கே பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்த கைப்பற்றி 2,900 கிலோ வெடித்திருந்தால் என்னவாகி இருக்கும்?
வெடிபொருள்களுடன் பயங்கரவாதிகள் கைது செய்தது மூலம் லட்சக்கணக்கான மக்களை பிரதமர் மோடியும், தேசிய உளவுத் துறையினரும் காப்பாற்றியுள்ளனர். ஆனால், மத்திய அரசை குறை கூறி திமுக, விசிக போன்ற கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றன.
பயங்கரவாதிகளிடமிருந்து ராணுவத்தில் இருக்கும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் 363 கிலோ கிடைத்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு சதி நடந்திருக்க வாய்ப்புள்ளது. தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை காப்பாற்றத் தான் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்களை திமுகவினர் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது. 2026 தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய காங்கிரஸ், அங்கு 10 சீட்டுகளில் கூட வெற்றி பெறாது. சிறப்பு தீவிர திருத்தத்தால் பிஹாரில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாத சம்பவங்கள் இல்லை. அங்கு புதிய அரசு அமைந்த பிறகுதான் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஒரே மதத்தைச் சேர்ந்தோர் ஏன் பயங்கரவாதிகளாக உள்ளனர் என்பதற்கு ப.சிதம்பரம் பதில் கூற வேண்டும்” என்று அவர் கூறினார்.