டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்

டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்
Updated on
2 min read

மதுரை: “தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் மக்களுக்காக எந்தப் பணியும், எந்த நன்மையும் செய்யாமல் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசிக்கொண்டும், தூங்குவதை போல நடிக்கும், தோல்விக்கும் மேல் தோல்வி அடையும் டிடிவி.தினகரன் இயலாமையால் பேசுகிறார். தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தினம்தோறும் பத்திரிக்கையாளரை சந்திக்கும் தினகரன் பேச்சுக்கு என்ட் கார்டு (End Card) இல்லையா? என மக்களும் சலித்துப் போய்விட்டனர்.

ஜெயலலிதாவின் செல்வாக்கால் அதிமுக தொண்டர்கள் உழைப்பால் மக்களவை உறுப்பினர் ஆனார். அதை மறந்துவிட்டு அதிமுக தலைமையையும், அதிமுக தொண்டர்களையும் சிறுமைப்படுத்தி ஒழித்துவிடுவேன் என்று கடந்த 9 மாதங்களாக தினகரன் உதார் விடுகிறார். அதிமுக ஒன்றும் திமுகவை போல் கிடையாது. ஒரு சாமானிய தொண்டன் நாடாள முடியும், மக்கள் பணி ஆற்ற முடியும் என்ற சகாப்தத்தை பழனிசாமி உருவாக்கி உள்ளார்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தினகரன் ஒப்பாரி வைக்கிறார். இதை யாரும் கேட்க மாட்டார்கள். இனிமேல் தினகரன் டயலாக்கை மாற்றிப் பேச வேண்டும். அப்போதுதான் அவரது படம் ஓடும். அதிமுக கூட்டணி பற்றி ஏன் தினகரன் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். என்றைக்காவது தான் தொடங்கிய அமமுக பற்றியும், அதன் வளர்ச்சியை பற்றியோ கவலைப்பட்டது உண்டா?.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. கூட்டணியை பழனிசாமி பார்த்துக் கொள்வார். விஜய் அழைப்பாரா? என்று கூவி கூவிப் பார்த்து விட்டீர்கள். அவர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. விரக்தியில் அவசர அவசரமாக ஏதேதோ பேசி திருப்தி அடைகிறார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பற்றிய ரகசிய பேப்பரை கிழித்து போட்டேன் என்று பச்சைப் பொய்யை திரும்பத் திரும்ப நீங்கள் சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. நீங்கள் அவ்வளவு நல்லவரா?. வைத்திருந்தால் இந்நேரம் அதை வெளியிட்டு அரசியல் ஆதாயம் பார்த்து இருப்பீர்கள்.

2011-ம் ஆண்டு தினகரனை ஜெயலலிதா அடிப்படை உறுப்பினருந்து நீக்கி அவருடன் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது என்று கூறினார். ஜெயலலிதா இருக்கும் பொழுது அவரது வீட்டு வாசல் படி ஏறாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தீர்களே?. இன்றைக்கு உங்களுக்கு முகவரி கொடுத்த கட்சியை சிறுமைப்படுத்துவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜெயலலிதா உங்களைப் பெற்ற பிள்ளையைப் போல வளர்த்தார்களே, அதற்கு என்ன கைமாறு செய்தீர்கள்?. அவரது பதவிக்கு ஆசைப் பட்டு துரோகம் செய்தீர்கள். அவருக்கு துரோகம் செய்த நீங்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியலில் வெற்றி பெற முடியாது.

டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் எனக் காத்திருக்கும் கொக்கு போல டிடிவி காத்திருக்கிறார். கடலும் வற்றாது, டிடிவி-யினால் கருவாடும் தின்ன முடியாது.” என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in