Published : 01 Aug 2018 07:27 AM
Last Updated : 01 Aug 2018 07:27 AM

12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசயம்: கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூக்கள் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் உள்ள மலைப் பகுதிகளில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சிப் பூக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

குறிஞ்சிப் பூக்கள் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு கொண்டவை. இதனால் இப்பூக்கள் மற்ற பூக்களில் இருந்து தனித்துவம் பெறுகிறன. உலகெங்கிலும் 255 வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானலில் நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி, வெள்ளை குறிஞ்சி என 3 வகை குறிஞ்சிப் பூக்கள் மட்டுமே பூக்கின்றன.

நீலகிரி மலையில் நீல நிறத்தில் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கு வதை பார்ப்பதற்கு மலையே நீல நிறமாக காட்சி அளிப்பதுபோல் இருக்கும். நீல நிறத்தில் மலை காணப்பட்டதால் நீலகிரி எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது நீலகிரியில் குறிஞ்சி செடிகள் மிகவும் குறைந்த அளவே காணப்படுகின்றன.

3 அடி உயரமுள்ள குறிஞ்சி செடிகள் புதர்களில் அதிகம் காணப்படும். இந்த செடி கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியவை. குறிஞ்சி செடிகள் ஒருமுறை பூத்துவிட்டு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு மடிந்துவிடும்.

இதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த செடிகள் மீண்டும் ஒரே நேரத்தில் முளைத்து பூக்கின்றன. இந்த பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் மருத்துவ குணம் மிகுந்தது.

17 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ வகைகளும் உள்ளன. குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் மலைப் பகுதியில் முருகப் பெருமான் குறிஞ்சி ஆண்டவராக காட்சி அளிக்கும் கோயிலும் உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலர் தற்போது பூத்துக் குலுங்குகிறது. இப்பூக்கள் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பூக்கும்.

குறிஞ்சி பூக்கும் ஆண்டுகளில் உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள் சிறிய அளவில் குறிஞ்சி விழா கொண்டாடி வந்தனர். இது பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை சென்றடையவில்லை. இந்த முறை குறிஞ்சி பூவின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் குறிஞ்சி விழா கொண்டாட திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியதாவது: கொடைக்கானல் மலையில் குறிஞ்சி பூக்கள் அதிகம் பூத்துள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு செல்வது, குறிஞ்சிப் பூக்களின் சிறப்புகள் ஆகிய தகவல்கள் அடங்கிய வழிகாட்டிப் பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் குறிஞ்சி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x