கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணோம் - கடம்பூர் ராஜு அதிர்ச்சி 

கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணோம் - கடம்பூர் ராஜு அதிர்ச்சி 
Updated on
1 min read

கோவில்பட்டி தொகுதியில், தற்போதைய எம்எல்ஏவும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். சீர்திருத்தம் என்பது குறை நிறைகளை சரி செய்யத்தான். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் என்பதை போல் அந்த நிலை தான் திமுகவுக்கு. இவர்கள் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எஸ்ஐஆர் பணியை நிறுத்த முடியாது. தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டது கிடையாது.

கோவில்பட்டி தொகுதியை பொருத்த வரை கடந்த 9 மாதத்துக்கு முன்பிருந்தே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கி விட்டோம். இதில், 70 சதவீதம் பேர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள். இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30 சதவீதம் பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும். அதனால் இந்த தேர்தலில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஊரில் எஸ்ஐஆர் விண்ணப்பத்தை திமுக ஒன்றிய செயலாளர் வழங்கியதை அறிந்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினோம். இனி வரும் தேர்தல்களில் எஸ்ஐஆருக்கு பின்னர் வரும் வாக்காளர் பட்டியல் தான் முக்கியம். இந்த பட்டியலில் நமக்கு ஆதரவான வாக்குகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கடமையை சரியாக செய்தால் தான் 2026 தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in