

திமுக தலைவர் மறைவுக்கு ராணுவ மரியாதையும், ஏழு நாள் துக்கமும் அனுஷ்டிக்கப்படும், ஒரு நாள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்கு அன்று (8.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும், அவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், அவரின் உடல் மீது தேசிய கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன் குண்டு முழக்க மரியாதையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கவும், அந்தக் காலகட்டத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும், அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும் எனவும், தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும்'' என்று கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.