Published : 14 Aug 2018 08:28 AM
Last Updated : 14 Aug 2018 08:28 AM

தந்தையின் மறைவுக்கான துக்கம் முடியும் முன்பே மு.க.அழகிரி போர்க்கொடி; திமுகவில் திடீர் மோதல்: கருணாநிதியின் விசுவாசிகள் தன் பக்கமே உள்ளதாக அறிவிப்பு

கருணாநிதியின் மறைவுக்கான ஒரு வார துக்கம் முடியும் முன்பே மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ளதால் திமுகவில் திடீர் மோதல் உருவாகியுள்ளது. கருணாநிதியின் விசுவாசிகள் தன் பக்கமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் கருணாநிதியின் மகன்களான முக.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையே மோதல் வலுத்ததையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அதன்பிறகு, அவ்வப்போது, ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை கூறிவந்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த ஜூலை 27-ம் தேதி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும். குடும்பத்து டன் அங்கேயே இருந்தார் அழகிரி. அப்போது ஸ்டாலின் - அழகிரி இடையே அவரது சகோதரி செல்வியும், அவரது கணவர் முரசொலி செல்வமும் இணக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கிலும், உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையிலும் மூத்தவராக இருந் தாலும் ஸ்டாலினுக்கு வழிவிட்டு ஒதுங்கியே இருந்தார் அழகிரி. கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடிகூட ஸ்டாலினிடமே வழங்கப் பட்டது. இதனால், அழகிரி, ஸ்டாலின் இருவரும் இணக்க மாகிவிட்டனர். அழகிரிக்கு மீண்டும் தென் மண்டல அமைப்புச் செய லாளர் பதவி வழங்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கருணாநிதி மறைவுக்கான ஒரு வார துக்கம் முடியும் முன்பே, கட்சிக்குள் மீண்டும் கலகத்தை தொடங்கியுள்ளார் அழகிரி. கருணாநிதி மறைந்த 6-வது நாளான நேற்று, அவரது நினைவிடத்துக்கு வந்தார் மு.க.அழகிரி. மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, உள்ளிட்டோருடன் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “என் ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லி வேண்டிக் கொண்டேன். என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனது ஆதங்கம் குடும்பம் தொடர்பானது அல்ல. கட்சித் தொடர்பானது. நான் இப்போது திமுகவில் இல்லை. அதனால், திமுக செயற்குழு பற்றி எதுவும் தெரியாது’’ என்றார்.

மேலும், தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி யில், ‘‘நான் மீண்டும் திமுகவுக்கு வருவதை ஸ்டாலின் விரும்ப வில்லை. நான் வந்தால் கட்சியில் வலுவான தலைவராகி விடுவேன் என அஞ்சுகின்றனர். திமுகவில் பதவிகள் விற்கப்பட்டுள்ளன. திமுகவை அழிக்க நினைப்பவர் களை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது’’ என்றும் அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த கருத்தால் கருணாநிதி குடும்பத் தினரும் திமுகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னணியில் பாஜகவா?

கடந்த 2017 நவம்பர் 6-ம் தேதி கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அதற்கு நன்றி தெரிவித்து மோடிக்கு கடிதம் எழுதிய அழகிரி, மத்தியில் மோடி சிறப்பான ஆட்சி செய்வதாக பாராட்டி இருந்தார்.

கருணாநிதி மறைந்ததும், அவரது உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, திரும்பிச் செல்லும்போது, அழகிரி எங்கே என கேட்டுள்ளார். அவர் அரங்கின் உள்ளே இருந்ததால் சந்திக்கவில்லை. அஞ்சலி செலுத்த வந்திருந்த முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அரங்கின் உள்ளே தேடிச் சென்று அழகிரியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், கருணாநிதி மறைந்த ஆறே நாட்களில் கலகத்தை தொடங்கியுள்ளார் அழகிரி. அவரது பின்னணியில் பாஜக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவிடம் கேட்டபோது, ‘‘ஸ்டாலினிடம் எப்படி துக்கம் விசாரித்தோமோ, அதேபோலத்தான் கருணாநிதியின் மற்றொரு மகனான அழகிரியிடமும் துக்கம் விசாரித்தோம். துக்க வீட்டில் அரசியல் நடத்தும் தேவை எங்களுக்கு இல்லை. இது முழுக்க முழுக்க திமுகவின் உட்கட்சி விவகாரம்’’ என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும் பிளவுபட்ட அதிமுக ஒன்றானது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம்சாட்டின. அதுபோலவே, கருணாநிதி மறைவை பயன்படுத்தி திமுகவையும் உடைக்க பாஜக முயற்சிக்கிறது. அதன் தொடக்கமே ‘கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்’ என்ற அழகிரியின் கலகக்குரல் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x