

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன.
கும்பகோணம் வட்டம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் கார்த்தி (41). உயர் ரக கோழி வளர்க்கும் இவர், பாஜக கிழக்கு மாநகர தலைவராக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இன்று (நவ.7) அதிகாலை கோழி, நாய்களின் சத்தம் கேட்டு பின்னால் சென்றுபோது, 3-க்கும் மேற்பட்ட நாய்கள், கூண்டுக் கதவை உடைத்து, உள்ளே இருந்த 52 உயர் ரக கோழிகளை கடித்து குதறியுள்ளன.
இதையறிந்த கார்த்தி மற்றும் அருகில் உள்ளவர்கள் விரட்டியபோது, அவர்கள் மீது பாய வந்ததால், அவர்கள் வீட்டுக்குள் சென்று பதுங்கினர். தொடர்ந்து நாய்கள், சில கோழிகளை மட்டும் கவ்விக்கொண்டு அங்கிருந்த ஒடின. இதையடுத்து, கார்த்தி இச்சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையம் மற்றும் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், உயிரிழந்த கோழிகளை எடுத்துக்கொண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜேஷ் போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் போலீஸார், விவேகானந்த நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில், போராட்டத்தில் ஈடுபடும் முடிவை கார்த்திக் கைவிட்டார். இதையடுத்து, உயிரிழந்த கோழிகளை தூய்மைப் பணியாளர்கள் குப்பை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் கொண்டு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் ஆகும்.