

சென்னை: கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி. நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மை பணி தனியார் வசம் ஒப்படைக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நிலையில் பணி வழங்கக் கோரியும், தூய்மை பணியாளர்கள் 50 பெண்கள் உள்பட 80 பேர் நேற்று கண்ணகி சிலை பின்புறம் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடம் விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர். இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது 2 பிரிகளின் கீழ், அண்ணாசதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.