

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலினும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது.
சந்திப்புக்கு பின் தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பைஉணர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தேன். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் இந்த ஆட்சியின் திட்டங்களை ஆதரித்து வருகிறோம். தொடர்ந்து2026 சட்டப்பேரவை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம்.
அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி தலைமையிலான அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுக வலிமையை இழந்துள்ளது. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைகூட பழனிசாமியால் பாதுகாக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.