

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கண்டிப்பாக பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது 34-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் கனிமொழி எம்பி.யும் உடனிருந்தார்.
அப்போது, திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய இரு தொகுதிகளின் நிலவரமும் நமக்கு சாதகமாக இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை எனில் அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும். எனவே, தேர்தல் களப் பணிகளில் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகளை மிகுந்த முக்கியத்துவம் அளித்து கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளை அதட்டி வேலை வாங்காமல் தட்டிக் கொடுத்து பணியாற்ற வைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, திமுகவில் சமீபத்தில் சேர்ந்த பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கு, கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.