

சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் திமுக, கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ‘மன் கி பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நவ.7, 8-ல் பிரம்மாண்ட விழா: அதையொட்டி, நவ.7, 8-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான விழாக்களை நடத்த இருக்கிறோம். குறிப்பாக, பாரத தேசத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் தேசிய ஒருமைப்பாடு என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வில் நாங்கள் தேசியக் கொடியை பயன்படுத்தப் போகிறோம். இதில், அனைத்து கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாக திமுக, கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும்.
சேலத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செஞ்சி கோட்டையில் சுதாகர் ரெட்டி, சிவகங்கையில் ஹெச்.ராஜா, வேலூரில் நானும் கலந்து கொள்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் இது அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழக அரசும் இதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருந்தால் கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலினிடம் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும், அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை அறைகூவல் விடவேண்டும். தமிழகத்தில் ஒரு பெண், தோழனோடு இருந்தால்கூட அடித்து விரட்டி, பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.
தமிழகத்திலும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.