

சென்னை: அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் வளர்ச்சிக்காக புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கேம் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 17-வது இந்திய கேம் டெவலப்பர்களுக்கான மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 350-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். 75 அரங்குகள், 150-க்கும் மேற்பட்ட அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சியால் வழக்கமான தகவல் தொழில்நுட்பப் பணிகள் குறைந்து வரும் சூழலில், புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக (600 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதில் சரிபாதி பெண்கள் தலைமையிலானவை. இதுவே புத்தாக்க வளர்ச்சிக்கான சாட்சி.
இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், மற்றும் காமிக்ஸ் துறைக்கென ஒரு புதிய விரிவான கொள்கையை உருவாக்கும் பணியில் 2 ஆண்டுகளாக தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தக் கொள்கையின் 99 சதவீத அம்சங்கள், தொழில்துறையினரின் ஆலோசனைகள் மற்றும் அவர்களின் முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை பாடத்திட்டங்களை மாற்றி கேமிங் வடிவமைப்பு, புரோகிராமிங், அனிமேஷன் போன்றவற்றுக்குத் தேவையான திறன்களை மாணவர்களிடையே உருவாக்குதல், நிறுவனங்களுக்குத் தேவையான ஊக்கத்தொகைகள், மானியங்கள் வழங்குதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி போன்ற வசதிகள் மூலம் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் உள்ள நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவை முக்கிய தூண்களாகும்.
புகழ்பெற்ற நிண்டெண்டோ நிறுவனம் முதல்முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது. அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளோம். பப்ஜி போன்ற கேம்களை உருவாக்கிய கிராஃப்டான் நிறுவனம் ஏற்கெனவே பெங்களூருவில் உள்ள தங்களது மையத்தில் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்கிறது, அதில் ஒன்று மதுரையைச் சேர்ந்த நிறுவனம்.
இதுபோன்ற உலகளாவிய நிறுவனங்கள் தங்களது உலகளாவிய திறன் மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்பத் துறை செயலர் பிரஜேந்திர நவ்னித், கேம் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தலைவர் தர் முப்பிடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.