

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள சென்னை 2-வது பசுமை வெளி விமான நிலையத்துக்காக இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளை மிரட்டி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகப் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு குற்றம்சாட்டி உள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம்கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், விவசாயிகளின் விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 1,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.400 கோடி வரை இழப்பீடும் வழங்கப்பட்டுவிட்டது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழுவின் செயலர் சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களைக் கொடுத்தனர் என்ற ஒரு தோற்றத்தை அரசு திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. முதலில், முதலீட்டு நோக்கில் நிலம் வாங்கிப் போட்டிருந்த வெளியூர் விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக, உள்ளூர் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அச்சுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஒருபடிமேலே சென்று, `உங்கள் இழப்பீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தைக் கொடுக்க மறுத்தால், அந்தத் தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு, உங்கள் நிலத்தைச் சுற்றி வேலி போட்டுவிடுவோம். பிறகு நீங்கள் வழக்கில் போராடிப் பெற வேண்டியதுதான்' என்று கூறுகின்றனர்.
இந்த அழுத்தத்தின் காரணமாகவே சில விவசாயிகள் நிலத்தைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்களது வாழ்வாதாரமானவிளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, மக்கள் போராட்டத்துடன் சட்டப் போராட்டமும் தொடரும். ஏற்கெனவே ஏரிப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விரைவில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காக மாற்றி தாக்கல் செய்ய உள்ளோம். எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை ஓயாது" என்றார்.