

நல்வழி காட்டுவதாகச் சொல்லி தன் பக்கம் இழுத்துச் சென்ற தலைவர் ‘பிஎஸ்’, நடுவழியில் நிறுத்தியதால் திக்கிக் திணறிப் போயிருந்த, ‘குளத்து’ தொகுதி மக்கள் பிரதிநிதியானவர் சமய சந்தர்ப்பம் பார்த்து சுதாரித்து சூரியக் கட்சியில் செட்டிலாகிவிட்டார். இதேபோல் ‘பிஎஸ்’ தலைவரை நம்பிச் சென்ற டெல்டா மாவீரனான ட்ரீட்மென்ட் ‘லிங்கப்’ புள்ளியும் ஏக அப்செட்டில் இருக்கிறாராம். தலைவர், தலைவி என்று சொல்லிச் சொல்லியே பழகிப்போன ‘லிங்கப்’ புள்ளிக்கு, ‘பிஎஸ்’ தலைவரின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சுத்தமாக உடன்பாடில்லையாம்.
குறிப்பாக, அப்பாவும் பிள்ளையும் ஜோடி போட்டுச் சென்று சூரியக் கட்சி தலைவரை சந்தித்து இருக்கை நுனியில் அமர்ந்து பேசிவிட்டு வந்ததில் அவருக்கு உடன்பாடே இல்லையாம். அதேசமயம், தான் கோலோச்சும் டெல்டா பகுதியில் சூரியக் கட்சிக்குள் ஏராளமான கிங்கரர்கள் இருப்பதால் ஒருவேளை, தான் சூரியக் கட்சிக்கு போனாலும் அவர்கள் நம்மை அஞ்சுபிசாவுக்கு பிரயோஜனமில்லாமல் செய்துவிடுவார்கள் என்று மிரள்கிறாராம் ‘லிங்கப்’ புள்ளி.
அதனால், சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழுந்துவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கும் அவர், இது விஷயமாக எடக்கானவர் தரப்பு ஆட்களுக்கு ‘லிங்க்’ அனுப்பி வருகிறாராம். எடக்கானவருக்கு ஜே போடுவதன் மூலம் தன் மீதான அமலாக்கத் துறை ‘அம்புகளையும்’ லாகவகமாக சமாளிக்க முடியும் என்ற ராஜதந்திரமும் திருவாளர் ட்ரீட்மென்ட் ’லிங்கப்’ புள்ளியின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கிறதாம்.