

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலானது. அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமியின் அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும் இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்ததுபோல தெரிகிறது. ஆனால், வளராது.
நடிகர் விஜய் தவெக தலைவராக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். எம்ஜிஆரை விட விஜய்க்கு அதிக கூட்டம் கூடுகிறது. அவர் வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியில் கட்டுப்பாடு, கடமை உடையவர்களின் வழிகாட்டல் இருந்தால், கரூர் சம்பவம்போல இனி நடக்காமல், முறையாக வழிநடத்த முடியும்.
வருங்காலத்தில் இதை விஜய் கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன். தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் எப்போதும் நடப்பது தான். தற்போது மீடியா வெளிச்சம் அதிகம் இருப்பதால், பிரகாசமாய் தெரிகிறது.
கோவை சம்பவம் போல நடக்காமல் தடுப்பது அவசியம். முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். தவெகவில் சேர்ந்து வழிகாட்ட வாய்ப்புள்ளதா என கேட்கிறீர்கள், எனக்கு களங்கம் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது, அவர் ருத்திராட்ச மாலை அணிந்திருத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சமய சொற்பொழிவுக்கு வந்ததால் ருத்திராட்ச மாலை அணிவித்தார்கள். அதை அணிந்து கொண்டுள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.