

திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 65 வார்டுகள். இதில், திருச்சி மத்திய மாவட்ட திமுக எல்லைக்குள் வரும் 29 வார்டுகளில் தலா ஒரு வட்டச்செயலாளர் வீதம் இருக்கிறார்கள், ஆனால் அதுவே, திருச்சி தெற்கு மாவட்ட திமுக-வுக்குள் வரும் 36 வார்டுகளில் வார்டுக்கு தலா இருவர் வீதம் 72 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.
இதையடுத்து, மத்திய மாவட்டத்திலும் ஒரு வார்டுக்கு தலா 2 செயலாளர்கள் வீதம் 29 வார்டுகளுக்குமான வட்டச் செயலாளர் களின் எண்ணிக்கையை 58 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவின் மேற்பார்வையில், மாநகர திமுக செயலாளர் அன்பழகன் மேற்கொண்டு வந்தார். அதற்கு தற்போது முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.
புதிதாக நியமிக்கப்படவிருக்கும் வட்டச் செயலாளர்கள் பட்டியலை மாநகரச் செயலாளர் அன்பழகன் தன்னிச்சையாக தயார் செய்திருப்பதாகவும், தனக்கு வேண்டப்பட்ட நபர்களை மட்டுமே அந்தப் பட்டியலில் அவர் சேர்த்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், மத்திய மாவட்டச் செயலாளரான வைரமணியின் கவனத்துக்கே கொண்டு செல்லாமல் அன்பழகன் வட்டச் செயலாளர்கள் பட்டியலை தயாரித்திருப்பதாக எழுந்திருக்கும் சர்ச்சையும் திருச்சி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து புதிதாக தயாரிக்கப்பட்ட வட்டச் செயலாளர்கள் பட்டியலை நிறுத்தி வைக்கும்படி அமைச்சர் நேரு உத்தரவிட்டதால் பட்டியல் வெளியாவது தள்ளிப் போயிருக்கிறது.
இதுகுறித்து திமுக மாநகரச் செயலாளர் அன்பழகனிடம் கேட்டதற்கு, ‘‘ஒரு வட்டத்தை இரண்டாகப் பிரித்து கூடுதலாக ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும். இதில், பதவி கிடைக்காத மற்றவர்கள் வருத்தமடைகின்றனர். எனவே, தேர்தல் முடியும் வரை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பில்லை’’ என்றார்.