

சென்னை: எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் நடந்த பாலியல் சம்பவத்தில் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சுட்டு பிடித்திருக்கிறார்கள்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும். காவல்துறையில் சிஎஸ்ஆர் நிதியை முழுமையாக பயன்படுத்தி கேமராக்களை அமைக்க வேண்டும்.
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து 2003-ம் ஆண்டின் எஸ்ஐஆர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்த விவகாரத்தில் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
பல மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டும் போதாது, நீங்கள் சேர்ப்பதற்காக கொடுத்த பெயரை நீக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்குரிமையை பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. அதனால் நம்முடைய வாக்குரிமையை யாரும் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் மாவட்டம் வாரியாகவும் சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் ‘வார் ரூம்’ அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.