

கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்புவைத்து, கட்டுப்பாட்டை மீறியதாக கோபி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் சுமத்தினார்.
இந்நிலையில், சென்னை செல்வதற்காக நேற்று கோவை விமான நிலையம் வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறேன்.
இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வருகின்ற பிரச்சினைகளைப் பார்க்கும்போது, திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை; அதிமுகவிலும் பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களின் தலையீடு இருக்கிறது. தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பதுதான் தத்துவம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.