

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் நாளை (நவ.4), ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 6, 7 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா 3 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், அவலூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.