

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 64 கழக மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிளான மாணவரணி, மகளிரணி, தொண்டரணி, இளைஞரணி உள்ளிட்ட பதவிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய், மாநில மாநாடுகளை நடத்தியதுடன், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் விறுவிறுப்பாக நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 27ல் கரூர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தவெக கட்சியும், அதன் தலைவர் விஜய்யும் முடங்கிய நிலையில் இருந்தனர்.
இந்தச் சூழலில், சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து ஆறுதல் கூறினார் விஜய். தொடர்ந்து நிர்வாகக் குழு கூட்டத்தையும் நடத்தியது தவெக.
இதனைத் தொடர்ந்து தற்போது கட்சியின் இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி பொறுப்பாளர்களின் பட்டியலை இன்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில் 64 கழக மாவட்டங்கள் அடங்கும். மேலும், 65 கழக மாவட்டங்களுக்கான மகளிரணி நிர்வாகிகளையும் விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வரும் நவம்பர் 5 ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூடவுள்ள நிலையில், முக்கிய அணிகளின் நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு பொதுக்குழுவில், தேர்தல் மற்றும் பிரச்சாரம் குறித்த முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.