

சென்னை: தமிழகத்தில் மலையேற்றப் பாதைகளை 50-ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக வனத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகத்தின் கூட்டு முயற்சியாக, இயற்கை வளத்தைப் போற்றுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை கடந்த ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் மற்றும் கிராம மக்களுக்கு மலையேற்ற வழிகாட்டிகளுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கி, உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
இந்த திட்டத்தில், கடந்த ஓராண்டில் 15,500-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அழகிய வனப் பாதைகள் வழியாக பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்கள் மூலம் 1,400-க்கும் மேற்பட்டோரும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி சுவாமி மலையில் 2,209 பேரும், திருவள்ளூர் குடியம் குகையில் 1,743 பேரும் பங்கேற்றுள்ளனர். அரசின் மலையேற்றத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தை மேம்படுத்த மலையேற்ற பாதைகளின் எண்ணிக்கை 50-க்கு மேல் உயர்த்தவும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சூழல் சுற்றுலா தொகுப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அனுபவ வழிக் கற்றலை ஊக்குவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தனித்துவம் மிக்க மலையேற்ற திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.