

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள், விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், விரைவில் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஈசிஆர் சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளை இங்கு நிறுத்தி இயக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில், 6.98 ஏக்கர் பரப்பளவில் ரூ. 90.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்படும் இப்பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 345 இருசக்கர வாகனங்கள் மற்றும் 150 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 18 கேஎல்டி அளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், தரைதளத்தில் 48 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், பயண சீட்டு வழங்கும் அலுவலகம், ஏடிஎம், பயணிகள் காத்திருப்பு அறை, பெண்களுக்கான ஓய்வறை மற்றும் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர, சமையல் அறையுடன் கூடிய உணவகம், கண்காணிப்பு அறை, பணியாளர் ஓய்வறை, ஓட்டுநர்கள் தங்கும் அறைகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், கூடுதல் பணியாளர்களுடன் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால், பல்வேறு வசதிகளுடன் புதிய தோற்றத்தில் கட்டப்படும் இப்பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பயணிகள் கோரிக்கை: இதற்கிடையே, புதிய பேருந்து நிலையத்தில் ஈசிஆர் சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும், தொலைதூர பகுதிகளுக்கு இங்கிருந்து நேரடி பேருந்து சேவைகளை ஏற்படுத்த வேண்
டும் என உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.