

விஜய்யின் 2-ம் கட்ட பிரச்சாரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தவெக-வில் மக்கள் பாதுகாப்பு படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பிரிவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் பனையூரில் நேற்று நடந்தது.
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, தவெக தலைவர் விஜய் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோட் ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக, கட்சியின் ஒவ்வொரு அணி பிரிவு நிர்வாகிகளுக்கும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விஜய் கூட்டத்துக்கு வரும் மக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில், ‘மக்கள் பாதுகாப்பு படை’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில், ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கள் 15 பேர் கொண்ட குழு இந்த ‘மக்கள் பாதுகாப்பு படை’க்கு பொறுபேற்றிருக்கின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்துமாவட்டங்களில் இருந்தும் 2,500 பேரை இந்த குழு தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். பொருளாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையிலான டிஎஸ்பிக்கள் கொண்ட குழு கலந்து கொண்டு, மக்கள் பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும், இவர்களுக்கு ஒருவாரம் தொடர்ந்து பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல், மகளிர் பாதுகாப்பு படையும் உருவாக்க தவெக திட்டமிட்டுள்ளது. அதன்படி,தமிழகம் முழுவதும் இந்த பிரிவுக்கு 1,500 பெண்களை தேர்வு செய்யும் பணியில் தவெகவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெண் தொண்டர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்களுக்கு கட்சியின் சார்பில் சீருடை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கான பயிற்சிகள் எல்லாம் முடிவுற்ற பிறகு, விஜய்யின் இரண்டாம் கட்ட பிரச்சார பயண திட்டம் அறிவிப்பு வெளியாக உள்ளது. இரண்டாம் கட்ட பிரச்சாரம் முடிவடைந்த பிறகு மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.