

ஏற்கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவுக்குள் மீண்டும் அரவணைக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட இபிஎஸ், செங்கோட்டையன் மீது கைவைத்தால் என்னாகுமோ என்றெல்லாம் யோசிக்காமல் துணிச்சலுடன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தனது ஒற்றைத் தலைமையின் வலிமையை மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார்.
“களைகளை எடுத்தால் தான் பயிர் செழிக்கும். கட்சியில் உள்ள களைகள் அகற்றப்பட்டதால் இனி கட்சி செழித்து வளரும்; ஆட்சியிலும் அமரும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கும் இபிஎஸ், கட்சியைவிட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ், தினகரனை விட கட்சிக்குள் இருந்து கொண்டே தனக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையனைப் பற்றி தான் சற்றே கவலை கொண்டார். இப்போது அவரையும் கழற்றிவிட்டதன் மூலம், தனக்கிருந்த இன்னொரு தொல்லையும் நீங்கிவிட்டதாக அவர் நிம்மதி கொண்டிருக்கிறார்.
அண்மையில் தனது தென் மாவட்ட பிரச்சாரப் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருப்பதன் மூலமும் இந்த ஆண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு தடபுடலாகச் சென்று வந்ததன் மூலமும் தனக்கு எதிரான, ‘தேவரின மக்களின் வாக்கு வங்கி’ என்ற ஓபிஎஸ் - தினகரன் வகையறாக்களின் தேர்தல் பிரச்சாரம் இனி எடுபடாது என்று நிரூபித்திருக்கிறார் இபிஎஸ்.
அதேபோல் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கு, முன்பிருந்த செல்வாக்கெல்லாம் இல்லை என்பதையும் தனது பிரச்சாரப் பயணத்தின் மூலமும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட சர்வே மூலமும் உறுதி செய்துகொண்டிருக்கும் இபிஎஸ், கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இனி யாரை நினைத்தும் கவலைப்படத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால் தனக்கு எதிரான ‘கலகக்காரர்களை’ கழகத்தினர் மத்தியில் அம்பலப்படுத்தவும் துணிந்துவிட்டார் அவர்.
தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் அண்மைக்கால திமுக ஆதரவு நடவடிக்கைகளை வைத்து அவர்களை திமுகவின் ‘பி டீம்’ என விமர்சித்து வந்த இபிஎஸ், இப்போது இந்தக் கூட்டணிக்குள் செங்கோட்டையனின் பெயரையும் சேர்த்து அதிமுகவினர் மத்தியில் அவருக்கு இருக்கும் எம்ஜிஆர் காலத்து விசுவாசி என்ற பிம்பத்தையும் தந்திரமாக சரித்திருக்கிறார்.
தனது இந்த ராஜதந்திர நடவடிக்கைகளால், உண்மையான அதிமுக விசுவாசிகள் யாரும் இனி இந்த மூவர் கூட்டணி பேச்சை நம்பி அவர்கள் பின்னால் போகமாட்டார்கள் என நம்பும் இபிஎஸ், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டு தன்னை நெருஞ்சியாய் குத்திக் கொண்டிருந்த முட்களையும் திமுக முத்திரை குத்தி பொசுக்கிவிட்டதாக நிம்மதி கொண்டிருக்கிறார்.