

மதுரை: மழைவெள்ள காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கூட்டம் அவசியமா? என்று ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வினவிய காங், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அங்கீகரிக்கபபட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மதுரை மாவட்டத்தில் நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவது தொடர்பாக வீடுகள் தோறும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படவுள்ளது.
இதனை பொதுமக்கள் நிரப்பி வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் திரும்ப வழங்க வேண்டும். இது விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும், இறந்தவர்கள், மாறுதலாகிச் சென்றவர்களை நீக்கவும் உதவும். பிஹாரில் 7 1/2 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. ’’ என்றார்.
ஆட்சியர் பிரவீன்குமாரின் இந்த கருத்தை கண்டித்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், எஸ்ஐஆர் முறையை எதிர்த்து வெளிநடப்பு செய்தன.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கணேசன் பேசுகையில், “தற்போது மழை வெள்ள காலத்தில் இதுபோன்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்துவது உகந்ததல்ல. பிஹாரில் இதே பட்டியல் திருத்தத்தின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. ஏதோ திட்டத்துடன்தான் இவர்கள் வாக்காளர் பட்டியல் திருத்தம் மெற்கொள்கின்றனர். எனவே, இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம்.” என்றார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை பேசுகையில், “தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அதிமுக சார்பில் வரவேற்கிறோம். தற்போது கூட தமிழகத்தில் போலி வாக்காளர்கள் உள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதியில் 44 ஆயிரம் பேர் வீதம் தொகுதிக்கு வெளியில் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளனர். 8 ஆயிரம் பேர் இறந்தவர்கள் உள்ளனர்.
நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் காரணமாக சென்னை தி.நகர் தொகுதியில் 13 ஆயிரம் வாக்காளர் நீக்கப்பட்டனர். இந்த திருத்தத்திற்கு அதிகாரிகள் போல் வேறு ஆட்கள் விண்ணப்பங்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும். அதற்கு தேர்தல் அலுவலகர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். புகார் தெரிவிக்க வசதியாக அவர்கள் செல்போன் எண் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.” என்றார்.
திமுக சார்பில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவசேனன் பேசுகையில், “தற்போது எடுக்கப்படும் எஸ்ஐஆர், 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வாக்காளர் கணக்கெடுப்பின்போது உள்ள தாய் வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என கூறியுள்ளீர்கள். அப்படியென்றால், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நடைபெற்ற எஸ்ஐஆர் எந்த தாய் வாக்காளர் பட்டியலுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது என்பதை கூறவேண்டும்.” என்றார்.
இதற்கு ஆட்சியர் பதிலளிக்கையில், ‘‘2002-ம் ஆண்டுக்கு முன்னர் எப்போது எஸ்ஐஆர் நடைபெற்றது என்பது குறித்து பார்த்துச் சொல்கிறேன். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் என்னால் தலையிட முடியாது, ’’ என்றார்.
மதுரை மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கூறுகையில், போலி வாக்காளர்களை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் முறையை வரவேற்கிறோம் என்றார்.