

சென்னை: இந்தியாவில் கடும் வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரள அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய வாழ்த்துக் கடிதம்: இந்தியாவின் முதல் கடும் வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளா நவ.1-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. சமூகநீதிக் களத்தில் இது மகத்தான மைல்கல்லாகும். கேரளாவின் இந்த வெற்றி, இது மனித மாண்புக்கான ஒரு புரட்சி ஆகும்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு மூலம் கடும் வறுமையில் தவிக்கும் 64,006 குடும்பங்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு, உணவு, ஆரோக்கியம், வீடு, வாழ்வாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட ஒருங்கிணைந்த தலையீடுகள் மூலம் வறுமையின் பன்முகத்தன்மைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதற்கேற்ப ஒவ்வொரு குடும்பத்தின் தேவைக்கேற்ப நுண் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது. 1957 நிலச்சீர்திருத்தங்கள் முதல் பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் வரையில் இடதுசாரிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பல்லாண்டு கால சமூக மாற்றத்தின் உச்சமே இந்த வெற்றியாகும். கடும் வறுமை என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல. அரசியல் உறுதிப்பாட்டால் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு சமூக அவலம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு புதிய சோசலிச முன்மாதிரியை கேரளா நிறுவியுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.