

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் அனைவரின் நன்மதிப்பை பெற்ற தலைவராகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தினர். அதற்கான அழைப்பிதழ், பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று கூறி, விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
பின்னர், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம், ‘அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும்' என்று கூறிய செங்கோட்டையன் அதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். அதைத் தொடர்ந்து, அவரது அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், கட்சி ஒருங்கிணைப்பை வலியுறுத்திவரும் டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பசும்பொன்னில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் செங்கோட்டையனும் பங்கேற்றது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பழனிசாமி தலைமையில் சேலத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேரிலும், தொலைபேசியிலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின்னர், செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டு வருவதாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துபொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக இன்று விரிவாக பேச இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.