அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: பழனிசாமி அதிரடி நடவடிக்கை

செங்கோட்டையன், பழனிசாமி | கோப்புப் படம்
செங்கோட்டையன், பழனிசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டார். இதனால் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்தக் காரணங்களால் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? _ அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையன், கட்​சி​யில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை மீண்​டும் சேர்க்க வேண்​டும் என்று பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடு விதித்​தார். இதனால் அதிருப்​தி​யடைந்த பழனி​சாமி, செங்​கோட்​டையனின் கட்​சிப் பொறுப்​பு​களை பறித்​தார். இந்த நிலையில், நேற்று தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​து​வதற்​காக மதுரை சென்ற செங்​கோட்​டையன், தனி​யார் ஹோட்​டலில் தங்​கி​யிருந்த ஓ.பன்​னீர்​செல்​வத்தை திடீரென சந்​தித்​துப் பேசி​னார்.

பின்​னர் இரு​வரும் ஒரே காரில் மதுரை​யில் இருந்து பசும்​பொன்​னுக்கு சென்றது பேசுபொருளாக மாறியது. பின்​னர் ராம​நாத​புரம் மாவட்​டம் அபி​ராமம் அருகே டிடி​வி.​தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம், செங்​கோட்​டையன் மூவரும் சந்தித்​து, சிறிது நேரம் ஆலோ​சனை செய்​தனர். பின்​னர் பசும்​பொன் சென்ற மூவரும் தேவர் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​தினர்.

சசிகலாவுடன் ஆலோசனை: துரோகத்தை வீழ்த்​த​வும், திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​ப​வும் அவர்​கள் சபதம் செய்​தனர். பின்னர் அங்கு வந்த சசிகலா​வை, ஓபிஎஸ், செங்​கோட்டையன் சந்​தித்​துப் பேசினர். ஆனால், டிடி​வி.​தினகரன் சசிகலாவை சந்​திக்​காமல் புறப்​பட்டு சென்​றார். இச்சம்பவம் நேற்று அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

செங்​கோட்​டையனின் செயல்​பாடு​கள் தொடர்​பாக மதுரை கப்​பலூரில் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களிடம் நேற்று பழனி​சாமி ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்​போது, “செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கு​வதற்கு எந்த தயக்​க​மும் இல்​லை. அதற்கு சில நடை​முறை​கள் உள்​ளன, பொறுத்து இருங்​கள்” என்று தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் பழனிசாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in