‘வட மாநிலத்தோரை வசைபாடி வன்மம் கக்கும் திமுக’ - முதல்வர் ஸ்டாலின் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

‘வட மாநிலத்தோரை வசைபாடி வன்மம் கக்கும் திமுக’ - முதல்வர் ஸ்டாலின் மீது நயினார் நாகேந்திரன் சாடல்
Updated on
1 min read

சென்னை: ‘வட மாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிஹாரில் தேர்தல் காலம் வந்தால் வட மாநிலத்தவர்களைப் ‘பிரதர்’ எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இன்று தமிழர்கள் - பிஹாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே... தங்களது தேர்தல் பிரச்சாரத்தின்போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வட மாநிலத்தவர்களைத் தமிழகத்துக்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா?

பிஹாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசியபோதும், தங்களது மூத்த அமைச்சர் துரைமுருகன் வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடிய போதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பிஹார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத்தான் நமது பாரதப் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு - தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண்.

காரணம், பொழுது போகாவிட்டால் வட மாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிஹாரில் தேர்தல் காலம் வந்தால் வட மாநிலத்தவர்களைப் ‘பிரதர்’ எனக் கூறி இண்டியா கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர். எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in