

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செயலர் பூபீந்தர் பாய் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு குடிமையியல் பணி அதிகாரிகளான எஸ்.கவிதா, சி.முத்துக்குமரன், பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்.வீரப்பன், ஆர். ரேவதி ஆகியோரை இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றுள்ள எஸ்.கவிதா தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளராகவும், சி.முத்துக்குமரன் பேரிடர் மேலாண்மை ஆணைய இணை இயக்குநராகவும், பி.எஸ்.லீலா அலெக்ஸ் சென்னை சிப்காட் பொதுமேலாளராகவும் எம்.வீரப்பன் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும், ஆர்.ரேவதி கங்கைகொண்டான் சிப்காட் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (நிலஎடுப்பு) பணியாற்றி வருகின்றனர்.