

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சிவனாகிய பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் என பதிவேட்டில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள் பயணமாக குடும்பத்தினருடன் நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். நேற்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானம் செய்த ஆளுநர், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலுக்கு சென்ற ஆளுநர், கோயில் மூலஸ்தானத்தில் மும்மூர்தியையும், 18 அடி உயர ஆஞ்சநேயரையும், பிற சன்னதிகளிலும் குடும்பத்தினருடன் வழிபட்டார்.
பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி சென்ற ஆளுநர் சுசீந்திரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் முன்பு கோயில் பார்வையாளர் பதிவேட்டில் ஆங்கிலத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.
அதில்,”சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் எனக்கு சிறப்பான தரிசனம் கிடைத்தது. இக்கோயில் நிர்வாக பணியாளர்களின் உழைப்பால் கோயில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சிவனாகிய அந்த பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். வாழ்க பாரதம்!” என குறிப்பிட்டுள்ளார்.